Top News

கத்தார் பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டம் : டிசம்பர் 18 இல் இறுதிப் போட்டி



(என்.வீ.ஏ.)


கத்தாரில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் 2010 உலக சம்பியன் ஸ்பெய்னும் 2014 உலக சம்பியன் ஜெர்மனியும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றன.


வரவேற்பு நாடான கத்தாரும் முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டீனாவும் மிகவும் கடினமான குழுக்களில் இடம்பெறுவதுடன் பிரான்ஸ், டென்மார்க் ஆகியனவும் பெல்ஜியம், கனடா ஆகியனவும் ஒரே குழுக்களில் சந்திக்கவுள்ளன.


மூன்று தடவைகள் உப சம்பியனான நெதர்லாந்து, ஆபிரிக்காவின் பலம் வாய்ந்த செனகல், தென் அமெரிக்காவில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஈக்வடோர் ஆகிய அணிகளை ஏ குழுவில் கத்தார் எதிர்த்தாடவுள்ளது.


பி குழுவில் இடம்பெறும் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்து, நவம்பர் மாதம் கறுப்பு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 25) ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்தாடவுள்ளது. இக்குழுவில் ஈரானும் இடம்பெறுவதுடன் ஐரோப்பிய ப்ளே ஓவ் அணி ஒன்றும் இணையவுள்ளது.


அமெரிக்காவிலும் கனடாவிலும் முந்தைய வருடத்தில் அறுவடை மற்றும் கிடைக்கப் பெற்ற நன்மைகளுக்கு நடத்தப்படும் நன்றி ஆராதனைக்கு மறுநாளே கறுப்பு வெள்ளியாகும், அன்றையதினம் கிறிஸ்மஸ் பண்டிக்கைக்கான கொள்வனவில் மக்கள் ஈடுபடுவர்.


சி குழுவில் ஆர்ஜன்டீனா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து ஆகியன இம்பெறுகின்றன.


டென்மார்க், டியூனிசியா, ப்ளே ஓவ் அணி ஆகியவற்றுடன் டி குழுவில் நடப்பு உலக சம்பியனான பிரான்ஸ் விளையாடவுள்ளது.


ஈ குழுவில் முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், ஜேர்மனி ஆகியவற்றுடன் ஜப்பான், ப்ளே ஒவ் அணி மோதவுள்ளன.


36 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள கனடா, உலக தரவரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள பெல்ஜியத்துடன் எவ் குழுவில் இடம்பெறுவதுடன் 2018 உப சம்பயின் குரோஏஷியா, மொரோக்கோ ஆகிய நாடுகளையும் எதிர்த்தாடவுள்ளது.


பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் முதலாம் இடத்தில் இருப்பதும் 5 தடவைகள் உலக சம்பியனானதுமான பிரேஸில், ஜீ குழுவில் சேர்பியா, சுவிட்சர்லாந்து, கெமறூன் ஆகிய நாடுகளுடன் இடம்பெறுகின்றது.


போர்த்துக்கல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய நாடுகள் எச். குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.


இம்முறை கத்தாருடன் ஜப்பான், தென் கொரியா, சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நான்கு ஆசிய நாடுகள் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பங்குபற்றுவதுடன் அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், நியூஸிலாந்து ஆகியன ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்திலிருந்து ப்ளே ஒவ் சுற்றில் விளையாடவுள்ளன.


ப்ளே ஓவ் போட்டிகள் ஜுன் 13 அல்லது 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.


இந்த வருட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்று நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 18ஆம் திகதி மாபெரும் இறுதிப் போட்டியுடன் முடிவுடையும்.


பீபா கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.


எட்டு குழுக்களுக்கான லீக் போட்டிகள் நவம்பர் 21ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறும்.


16 அணிகள் சுற்று அல்லது முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளிலும் கால் இறுதிகள் டிசம்பர் 9ஆம், 10ஆம் திகதிகளிலும் நடைபெறும்.


அரை இறுதிப் போட்டிகள் டிசம்பர் 13ஆம், 14ஆம் திகதிகளிலும் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி டிசம்பர் 17ஆம் திகதியும் உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி டிசம்பர் 18ஆம் திகதியும் நடைபெறும்.

Post a Comment

Previous Post Next Post