மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும் அதன் பின்னர் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது? ஜூன் மாதத்தில் தனியார் துறைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதமளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும். உலக உணவு தட்டுப்பாட்டுடன் இலங்கையிலும் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த 4 நாட்களாக கொழும்பு - காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பாரியதொரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் இலக்கில் இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மிகவும் அமைதியான முறையில் , நேர்த்தியாக அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் ஒன்று கூடியுள்ளனர், இவர்களில் எவருமே பஸ்களிலோ அல்லது லொறிகளிலோ கொழும்பிற்கு வரவில்லை. சுயமாக ஒன்றிணைந்துள்ளனர்.
ஜனாதிபதியையும் , பாராளுமன்றத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர் ஆனால், அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்பதாகத் தெரியவில்லை. 'உங்களால் முடியாவிட்டால் எம்மிடம் கையளித்துச் செல்லுங்கள்' என்பதே இவர்கள் அனைவரும் ஒருமித்து கூறும் செய்தியாகும். மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்? ஜூன் மாதத்தில் தனியார் துறைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதமளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும். உலக உணவு தட்டுப்பாட்டுடன் இலங்கையிலும் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படக் கூடும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர், உண்மையில் அவர் செல்லவில்லை என்னையே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இளைஞர்களின் இந்த புரட்சி மேலும் தீவிரமடைந்தால் அது பாரதூரமானதாக வெடிக்கும். பாராளுமன்றத்தினும் அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி வருகின்ற நிலையில் , இளைஞர்கள் முழு ஆட்சியிலும் புரட்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர். எதிர்வரும் இரு வருடங்களுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். போராடிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் எதிர்காலத்திற்காக அவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடர வேண்டும். அது நிச்சயம் வெற்றி பெரும் என்றார்.
Post a Comment