Top News

கடும் பொருளாதார நெருக்கடி – இலங்கைக்கு நிதி உதவி வழங்க முன்வந்த யாசகர்




தமிழகம், தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் தான் யாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாவை ( இலங்கை பெறுமதி 82 ஆயிரம் ரூபா )பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு வழங்க முன்வந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார்.


கொரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பல முறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார். தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் பூல்பாண்டியன் பாராட்டப்பட்டு வருகிறார். இதுவரை ரூ.4 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை கரோனா நிவாரண நிதியாக பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கை மக்களுக்கு உதவுமாறு தான் யாசகம் பெற்று சேமித்து வைத்த ரூ.20,000 பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

பூல்பாண்டியன் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு யாசகம் மட்டுமே கேட்கத் தெரியும், ஆனால் யாசகம் கொடுக்கத் தெரியாது என்பதால் ஏழைகளுக்கு உதவி சென்றடையும் என்பதால் அரசிடம் நிதி வழங்கி வருகிறேன். என்னைப் போல யாசகம் பெறும் பழக்கத்தை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும். உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.


இவர் தாம் யாசகர் பெறும் சிறு சிறு தொகையை மருந்து கடை நண்பர் ஒருவரிடம் சேமித்து வருவார். ரூ.10,000 சேர்ந்தவுடன் அந்தத் தொகையை நிவாரண நிதிக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இம்முறை அந்தத் தொகை ரூ.20,000 ஆகியிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post