எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக கடும் விமர்சனத்தை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பலஸ்தீனின் தற்போதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எம்.பி.க்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ரவூப் ஹக்கீம் எம்.பி.
பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை வகிக்கிறார். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாகவே இருந்து வருகிறது. உண்மையில் அரசாங்கத்துக்கு பலஸ்தீன் மீது அக்கறை இருக்குமானால் இஸ்ரேல் பிரதமரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற தென் ஆபிரிக்காவின் கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்போதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இஸ்ரேல் அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிப்பதாக எகிப்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேபோன்று பல நாடுகளும் அதற்கு ஆதரவளித்து வருகின்றன. ஆனால் பிராந்தியத்தில் சில நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை இன்னும் பேணிக்கொண்டு வருகின்றன. எமது அரசாங்கமும் இந்த தீர்மானத்தில் இருக்கிறது. அண்மையில் எமது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்த சபையில் உரையாற்றும்போது, நாங்கள் இஸ்ரேல், ஈரான் உறவை சமநிலைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் ஈரான் ஜனாதிபதி இங்கு வந்தார், நாங்கள் செங்கடலுக்கு எமது படைகளை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இது வெட்கப்படவேண்டிய விடயம் அல்லவா? இதுதானா அரசாங்கத்தின் இராஜதந்திர உறவின் பெரும் அடைவு? அதேநேரம் பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை வகிக்கிறார். அவர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார். இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அடிமையாகவே இருந்து வருகிறது. ஜனாதிபதி பைடனின் வேண்டுகோளுக்கு ஆதரவளிப்பதை அரசாங்கம் இராஜதந்திரம் என தெரிவிக்கிறது. காஸாவை அழிப்பதற்கு பைடன் அரசாங்கம் 2 ஆயிரம் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்குகிறது. ஆனால் பைடனின் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கர்கள் குரலெழுப்பி வருகின்றனர். அதேநேரம் இஸ்ரேலில் பண்ணைகளில் தொழில் செய்துவந்த வறிய பலஸ்தீனியர்களை அங்கிருந்து இஸ்ரேல் துரத்திவிட்டும் கொலை செய்ததாலும் அங்கு பண்ணைகளில் தொழில் செய்வதற்காக எமது தொழில் அமைச்சர் இங்குள்ள வறிய மக்களை தொழிலுக்காக அனுப்பி வருகிறார். பலஸ்தீன பிள்ளைகளுக்கு என அரசாங்கம் நிதி சேகரித்தது. ஆனால் அந்த நிதியும் பொது மக்களின் நிதியே தவிர அரசாங்கத்தின் நிதி அல்ல. அரசாங்கம் பெயர் போட்டுக்கொள்கிறது. உண்மையில் பலஸ்தீனத்துக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திடம் இருந்தால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தென் ஆபிரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளியுங்கள்.
மத்திய கிழக்கு நாடுகளை எப்போதும் கொந்தளிக்கும் நிலைப்பாட்டில் வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இஸ்ரேல், அமெரிக்கா இருந்து வருகிறது. ஈரானுக்கு எதிராகவும் இஸ்ரேல் யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஈரான் இஸ்ரேலுக்கு வழங்கிய பதிலடியால் இஸ்ரேல் மெளமாகியது. உக்ரைனில் யுத்தத்தை பைடனின் அரசாங்கமே ஆரம்பித்தது. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி புட்டினை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும் என பைடனுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றால் ஏன் இஸ்ரேல் பிரதமர் நதன்யாஹுவை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தவேண்டும் என தெரிவிக்க திராணியில்லை என கேட்கிறேம். பகலில் ஒருவேஷம் இரவில் ஒரு வேஷம் என்றே பைடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதில் தைரியமாக துணிச்சலாக செயற்பட்டார். அதன் காரணமாக பலஸ்தீனில் வீதியொன்றில் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இஸ்ரேலிய நலன் பிரிவினை இந்த நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தார். ஆனால் இஸ்ரேலில் இந்தளவு படுமோசமான வகையில் செயற்படும் போது அரசாங்கம் முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக செயற்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு எதிராக அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக இந்த சபையில் பிரேரணை நிறைவேற்றிய பின்னரும், இஸ்ரேல் தொடர்ந்தும் அட்டூழியங்களை முன்னெடுக்குமானால் எமது அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையை நிறுத்திக்கொள்வதாக அரசாங்கம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
எனவே பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தத்தை நிறுத்துவதற்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்பு சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பன பயன்படுத்திக்கொண்டு அங்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதுடன் யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சுயாதீன பலஸ்தீன் நாடு அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரணையை இந்த பாராளுமன்றம் ஊடாக முன்வைக்கிறோம் என்றார்.
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி.
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இன்னும் முடியாமல்போயிருப்பது மனித இனத்துக்கே இழுக்காகும். அதேநேரம் இஸ்ரேலின் இனப்படுகொலையை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஆறு மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீன மண்ணில் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வந்தாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக பலஸ்தீனத்தின் யதார்த்தம் ஏறக்குறைய சமூகத்திற்கு அம்பலமானது.
உலகெங்கிலும் உள்ள புதிய தலைமுறை, உலகின் எதிர்காலத்திற்கு உரித்துரிமை கொண்ட தலைமுறை, அந்த எதிர்காலத்தை வழிநடத்தப்போகும் தலைமுறை, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பெறுமதிகளுக்கு அர்த்தம் கொடுக்கும் பின்னணியில், இந்த முன்மொழிவு தொடர்பில் இன்று இந்த சபையில் விவாதிக்கிறோம்.
உலகின் பிரதான பல்கலைக்கழக மாணவ தலைமுறையினர் தனது உயிரையும் எதிர்காலத்தையும் அர்ப்பணித்து சுதந்திரம், ஜனநாயகம், நியாயம் மற்றும் நீதிக்காக முன்னின்று போராடும் தறுவாயில் இந்த முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடுகிறோம்.
கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையானது பலஸ்தீன அரசுக்கு புதிய உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது. இது ஐக்கிய நாடுகள் சபையில் முழு அங்கத்துவத்திற்கு வழி வகுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பான விவாதத்தின் போது, இஸ்ரேலிய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார் .மற்றும் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கான அமெரிக்க உதவியை குறைக்க எதிர்பார்க்கிறேன் என்று அச்சுறுத்தினார். இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 143 நாடுகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே இதை எதிர்த்தன.
சுதந்திரம், மனித உரிமைகள், நிறவெறி அல்லது இனவெறி போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒரு நாட்டின் வீட்டோ அதிகாரத்தால் செல்லுபடியற்றதாக்கியதை நாம் காண்கிறோம். சர்வதேச நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கு தொடர்ந்து சவால் விடுப்பதை நாம் இன்னும் பார்க்கிறோம். மோதல்களை நிறுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படைகளை நிறுத்துவதற்கான முன்மொழிவுகள் கூட அப்பட்டமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
சுயாதீன விசாரணைக்காக அந்த பூமிக்கு செல்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உரிமைக்கும் தொடர்ந்து சவால் விடுக்கப்பட்டு வருகிறது. எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா உட்பட அனைத்து மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர், ஆனால் நெதன்யாகு ஆட்சி சமாதானத்திற்கான வாய்ப்பை நிராகரித்துவிட்டது.
சர்வதேச அரசியலுக்காக உருவாக்கப்பட்ட மனிதாபிமான அவலத்தைத்தான் இன்று பலஸ்தீன மண்ணில் நாம் காண்கிறோம். காஸாவிற்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு வரும் அனைத்து வாயில்களையும் இஸ்ரேல் தற்போது மூடியுள்ளது. காஸாவில் பாதுகாப்பான பிரதேசம் என்று தற்போது எதுவுமே இல்லை.
ஆறு மாதங்களுக்கும் மேலாக, தினமும் இப்படி மக்கள் கொல்லப்பட்டு, பஞ்சத்தை உருவாக்கி, அதன் மூலம் மக்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள்,ஊடகவியலாளர்கள் என வேறுபாடின்றி அனைவரும் இறக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் இந்த இனப்படுகொலை இன்றைய காலகட்டத்தில் இன்னும் தடுக்கப்படவில்லை என்பது மனித குலத்திற்கே அவமானமாகும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும். அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்தது, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன். இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டும்.
நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பலஸ்தீனுக்கு பணம் சேகரிப்பதற்கு பதிலாக இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக முடியுமான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் ஹூதி போராளிகளை அடக்குவதற்கு எமது கடற்படையை செங்கடலுக்கு அனுப்பும் ஜனாதிபதி, இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வருவதை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையை ஆட்சி செய்துவந்த அனைத்து அரச தலைவர்களும் ஆரம்ப காலம் தொட்டு பலஸ்தீனுக்கு ஆதரவளித்து வந்திருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ்வுடன் எமக்கு உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் பலஸ்தீன் விடயத்தில் உறுதியாக இருந்து செயற்பட்டார். அதேபோன்று ரணசிங்க பிரேமதாச எமது நாட்டில் இருந்த இஸ்ரேல் காரியாலயத்தை மூடிவிட்டு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு அப்பால் சென்று பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பலஸ்தீன் மக்களுக்காக ஜனாதிபதி நிதியம் ஒன்றை ஆரம்பித்து பணம் திரட்டி வருகிறார். ஆனால் அவர் பணம் திரட்டி பலஸ்தீனத்துக்கு அனுப்பும்போது பலஸ்தீனில் பிள்ளைகள் உயிருடன் இருப்பார்களா எனத் தெரியாது. அதனால் நிதி திரட்டுவதைவிட இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமான விடயங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
எமது அண்மை நாடான மாலைதீவு இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குள் வருவதை தடை செய்துள்ளது. அதேபோன்று மத்திய கிழக்கில் பல நாடுகள் இஸ்ரேலுடன் இருக்கும் தொடர்புகளை நிறுத்தியுள்ளன. அதனால் நாடு என்றவகையில் எமக்கும் சில அழுத்தங்களை இஸ்ரேலுக்கும் ஏற்படுத்த முடியும். பலஸ்தீனர்கள் தொழில் செய்துவந்த இடங்களில் இருந்து இஸ்ரேல் அவர்களை நிறுத்தி இருக்கிறது. அந்த இடங்களுக்கே தற்போது தொழில் நிமித்தம் இலங்கையர்கள் அனுப்பப்படுகிறார்கள்.அதனால் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் யோசனை ஒன்றை முன்வைக்கிறோம்.
அதேபோன்று அண்மையில் இஸ்ரேல் ஆலோசனை காரியாலயம் ஒன்று எமது நாட்டில் திறக்கப்பட்டது. இதன் மூலம் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் கொண்டுவருவதே இவர்களின் திட்டமாகும். இந்த காரியாலயத்தை மூடச்செய்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஏன் ஜனாதிபதி இதனை செய்யாமல் இருக்கிறார். ஒரு பக்கத்தில் ஜனாதிபதி பலஸ்தீனுக்காக நிதி திரட்டி வருகிறார். மறு பக்கத்தில் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் கொண்டுவர தேவையான வழிகளை ஏற்படுத்தி வருகிறார். இது இரட்டை நிலைப்பாடு. எமது அரச தலைவர்கள் இராஜதந்திர நடவடிக்கைகளின்போது இவ்வாறான கொன்கையை பின்பற்றவில்லை. எமது அரச தலைவர்கள் இவ்வாறான வெளிவிவகார கொள்கையை பின்பற்றவில்லை.
கடந்த மாதம் ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு வந்தபோது அவரை வரவேற்று இராபோசனம் வழங்கி வழியனுப்பிய ஜனாதிபதி, மறுநாள் காலை காலி முகத்திடலில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஊஞ்சலில் ஏற்றி, அவரை தள்ளிக்கொண்டிருக்கிறார். இதுவா இவர்களின் வெளிநாட்டு கொள்கை. எனவே ஜனாதிபதி வெளிவிவகார விடயத்தில் இரட்டை வேஷத்தை நிறுத்திவிட்டு, பலஸ்தீன் விடயத்தில் இதுவரை பின்பற்றிவந்த பிளவுபடாத, பலஸ்தீனத்துக்கு ஆதரவு கொள்கையை தொடர்ந்து பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
டிலான் பெரேரா எம்.பி.
பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சால்வை அணிந்து சபைக்கு வருகை தந்தேன். அப்போது ஒருசிலர் என்னை பார்த்து ‘டிலான் சிங்கள தம்பியா’ என்று குறிப்பிட்டார்கள்.கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி போது’ டிலான் கொடியா’ என்றும் ஒருசிலர் என்னை விமர்சித்தார்கள்.
பலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையை சிங்களம்,கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாம் என்ற மத கோணத்தில் இருந்துக்கொண்டு பார்க்க கூடாது. மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்.பலஸ்தீனர்களுக்கு எதிராக போர் தொடுக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக உலகளாவிய மட்டத்தில் தற்போது எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ளன.இந்த எதிர்ப்புக்கள் நிச்சயம் வெற்றி பெறும்.
பயங்கரவாதி பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் இதுவரை 34 ஆயிரத்து 183 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்,77 ஆயிரத்து 804 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல்களினால் காஸா பகுதியில் 20 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..
பெஞ்சமின் நெதன்யாகுவின் பயங்கரவாத தாக்குதலினால் காஸாவில் மரணங்கள் மிகுதியாகியுள்ளன. 62 சதவீத மனித குடியிருப்புக்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இஸ்ரேல் இராணுவம் காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் அகதி முகாம்கள் மீதே தாக்குதல்களை நடத்துகின்றன.ஆகவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பயங்கரவாதி என்று குறிப்பிடுவதை தவிர்த்து வேறு வார்த்தைகள் ஏதும் கிடையாது.
பலஸ்தீனர்களுக்கு இலங்கை தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச யுத்த கோட்பாடுகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வரை இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.–
Post a Comment