பேருவளை குப்பை மேடு உருவாக்கப்பட்ட பகுதி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடமான கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பேருவளை நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தர பிரதமர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு நான் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து கடிதமொன்றை வழங்கியதை அவர் நினைவில் வைத்திருப்பார் என நான் நம்புகிறேன்.
அந்த கடிதத்தில், பேருவளை நகர சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பல வருட காலமாக பேருவளை, மருதானை, வத்திமிராஜபுர கிராமத்தில் உள்ள காணியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் வாழுகின்ற 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், இக்கிராமத்தை அண்மித்துள்ள மொரகல்ல சுற்றுலாப் பகுதியும் துர்நாற்றம் மற்றும் ஈக்கள் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லும் கால்வாய் அடைபட்டுள்ளதோடு இதனால், சிறிய மழை பெய்தாலும், இந்த வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் வசிக்க முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஈக்கள் பெரும் எண்ணிக்கையில் பெருகுவதால் வீடுகளில் உணவு சமைத்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவி வருகின்றன. கொசுக்கள் பெருகி டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. தோல் நோய்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்றும் இந்த கிராமத்தில் வசிப்பது நுரையீரல் நோய்கள் உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளன என தெரிவித்திருந்தேன்.
ஏப்ரல் மாதம் முழு நாட்டிலும் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பெருநாள் கொண்டாடப்பட்டது. ஆனாலும், சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாடவோ, பெருநாளைக் கொண்டாடவோ ஏற்ற சூழல் இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மிகவும் ஏழ்மையான, குறைந்த வருமானம் கொண்டவர்கள். இதன் காரணமாகவே, இந்த மக்களின் வலிகள் பற்றி எழுப்பப்படும் குரல்களை பொறுப்புள்ள தரப்பினர் உணரவில்லை என்றே தெரிகிறது.
பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இந்த கழிவுகள் அகற்றப்படும் விதத்தினால் இன்று பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளது. மீதொட்டமுல்லை குப்பை மேட்டில் நடந்ததைப் போன்று பாரிய உயிர்ச் சேதங்களுக்குப் பின்னர் பொறுப்பானவர்களின் கண்கள் திறக்கப் போகின்றனவா என்ற கேள்வியை வருத்தத்துடன் கேட்க வேண்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமரை நேரடியாக குற்றம் சாட்டுமளவுக்கு நான் நியாயமற்றவனாக நடந்து கொள்ள மாட்டேன். சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினருக்கும் இது தொடர்பில் பொறுப்புள்ளது. குறிப்பாக, உள்ளூராட்சி மன்றம், சுகாதாரத் திணைக்களம், சுற்றாடலுக்குப் பொறுப்பான தரப்பினர் என அனைவருக்கும் இது தொடர்பில் பொறுப்பு உள்ளது.
பேருவளை, களுத்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் சுகாதாரத் துறைக்கான பொறுப்பு மாகாண சபைக்கு அன்றி, நேரடியாக மத்திய அரசிடமே உள்ளது என்பதை நான் குறிப்பாகக் கூற வேண்டும். களுத்துறை தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பொது சுகாதார அதிகாரிகளின் அனைத்து பயிற்சிகளும் இந்நிறுவனத்தாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இந்தப் பிரதேசம் முன்மாதிரிப் பிரதேசமாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த குப்பைமேடு உருவாக்கப்பட்ட பகுதி இன்று ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூராட்சி மன்றம் உட்பட அனைத்து தரப்பினரையும் விரைவில் அழைத்து, கலந்துரையாடி, இந்த குப்பை மேட்டை அகற்றுவதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கு நிலையான தீர்வை வழங்குவதற்கும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment