தமக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் கஞ்சிபானி இம்ரானை இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய திறமை தனக்கு இருப்பதாக தற்போது பிரான்சில் தங்கியுள்ள முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், பொலிஸ் பரிசோதகராகவும் கடமையாற்றிய துமிந்த ஜயதிலக்க, தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அண்மையில் வெளிநாடு சென்றிருந்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கஞ்சிபானி இம்ரானின் பிறந்தநாள் விழாவில் துமிந்த ஜயதிலக்கவும் கலந்துக் கொண்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
“பாதாள உலக நபர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அது எனக்கு தேவையான ஒன்றும் இல்லை. தொழிலுக்காக அனைத்தையும் இழந்து வெளிநாடு ஒன்றுக்கு வந்து வாழ்ந்து வருகிறேன். எனது குழந்தை 05 மாதங்களாக பாடசாலைக்கு செல்லவில்லை. என் மனைவி 12 வீடுகளுக்கு மாறியுள்ளார். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சனையும் உள்ளது. அது தொடர்பில் யாரும் பேசுவது இல்லை.
“இலங்கையில் பாதாள உலகத்துக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகப் போராடிய ஒருவன் நான். நான் இன்னும் சர்வதேச பொலிஸ் உறுப்பினராக இருக்கிறேன். கஞ்சிபானி இம்ரான் பிரான்சில் இருந்தால் அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியும். தேவையான அதிகாரத்தை எனக்குக் கொடுங்கள். “
“கஞ்சிபானியை இலங்கைக்கு கொண்டு வருவதால் பாதாள உலகத்தையோ, போதைப்பொருள் கடத்தலையோ தடுக்க முடியாது. ஆனால் இலங்கைக்கு தேவைப்பட்டால் எனது பங்களிப்பை செய்ய தயங்கமாட்டேன்.”
Post a Comment