திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா?
திசைகாட்டி கணக்குகளை மறைத்து மக்களிடம் பொய் கூறுகின்றது.
அவர்களின் பொருளாதாரக் கொள்கையை உடனடியாக நாட்டுக்குகூற வேண்டும்.
திருடர்களைப் பிடிப்போம் என்று மேடையில் முழக்கமிட்டாலும், திருடர்களைப் பிடிக்குமாறு ஜேவிபியிடம் ஒப்படைக்கப்பட்ட போது ஆனந்த விஜேபால எந்தத் திருடனைப் பிடித்தார்? யாருடைய சொத்து திரும்ப எடுக்கப்பட்டது?
பிரபலமானதாக இல்லாவிட்டாலும் நான் எப்பொழுதும் மக்களிடம் உண்மையைக் கூறுகிறேன்.
சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
சஜித்துக்கும் நாமலுக்கும் வழங்கும் வாக்கு, அநுரகுமாரவுக்கு வழங்கும் வாக்காகவே அமையும்.
- ஜனாதிபதி கெஸ்பேவவில் தெரிவிப்பு
இன்று திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் திசைகாட்டி, தனது உண்மையான பொருளாதார கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரபலமாக இல்லாவிட்டாலும், மக்களின் எதிர்காலத்திற்காக எப்போதும் உண்மையை மட்டும் தான் கூறுவதாகவும் தெரிவித்தார்.
கெஸ்பேவவில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் முடியும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
அன்று அநுரகுமாரவிடம் ஒப்படைக்கப்பட்ட விவசாய அமைச்சரின் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால் இந்நாட்டின் விவசாயம் இன்று அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, கொள்கையற்று வெறுப்பையே விதைக்கும் அவரது வேலைத் திட்டம் நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்தையும் இலவசமாக தருவதாக கூறும் சஜித், அனுரகுமாரவுக்கும் தனக்கும் ஒப்பந்தம் இருப்பதாகவும், தன்னை தோற்கடிக்க அனுரவும் தானும் தயாராகி வருவதாக சஜித் கூறி வருவதாகவும் அவர் ஏற்கனவே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே, சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் வழங்கப்படும் வாக்கு அநுரகுமாரவுக்கு அளிக்கம் வாக்கு என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"இப்போது மக்கள் செப்டம்பர் 21 வாக்களித்து தமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியுள்ளது. நாட்டு மக்களுக்கு உணவு, கேஸ், மருந்து, உரம், தொழில் இருக்காத வேளையில் எந்த தலைவரும் அவற்றை பெற்றுத்தர முன்வரவில்லை.
இன்று வந்திருக்கும் தலைவர்கள் அன்று எங்கிருந்தார்கள்? என்னால் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மக்கள் வரிசைகளில் நிற்பது எனக்கு வருத்தமளித்தது. அதனால் பிரதமர் பதவியை ஏற்றுகொண்டேன். எவரிடமிருந்தும் நான் பதவியை பறித்தெடுக்கவில்லை. பின்பு நான் ஜனாதிபதியாகினேன். இன்று தட்டுப்பாடுகள் இல்லை. வரிசைகளும் இல்லை. ரூபாய் வலுவடைந்திருக்கிறது. பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைகிறது.
பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும். அதற்கு இன்னும் நான்கு வருடங்கள் தேவைப்படும். அதற்காகவே மக்களின் ஆணை கேட்கிறேன். இப்பகுதி மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. நெருக்கடிகள் அதிகரித்தாலும் மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை.
கஷ்டங்களுக்கு மத்தியிலேயே நாட்டை கொண்டு செல்ல வேண்டியிருந்தது. 2023 இலிருந்து வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்ற நம்பிக்கையிலேயே அதனை செய்தோம். பொருட்களின் விலை இன்று குறைந்திருப்பதால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது.
மக்களின் கஷ்டங்களை நாம் அறிவோம். தேவைகளை நிவர்த்திக்க போதிய பணம் இருக்கவில்லை. இந்த நிலையிலிருந்து மக்களை மீட்க வேண்டியிருந்தது. கிடைக்கும் நிவாரணங்களும் போதுமானவை அல்ல. கஷ்டமான தீர்மானங்களையேனும் மேற்கொண்டு பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டியிருந்தது.
இனிவரும் காலங்களில் இயலும் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவோம். புதிய முதலீடுகளை கொண்டு வருவோம். மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை வழங்குவோம்.
முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திசாநாயக்கவும் சஜித்தும் என்ன சொல்கிறார்கள்? அவர்கள் எம்மோடு தொடர்புபடவில்லை என்கின்றனர். எம்மை விரட்டிவிட்டு அதிகாரத்தை அவர்களிடம் தருமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிப்பதால் என்ன நடக்கும்? ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும். 370 அதிகரிப்பை தாங்க முடியாத மக்களால் 420 ஐ தாங்க முடியுமா?
தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்ட இடைவௌி 400 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது. அதனை செயற்படுத்தினால் டொலரின் பெறுமதி 470 ரூபாய் வரையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும்.
எம்மைத் திருடர்கள் என்று சொல்பவர்கள். எதற்காக மக்களிடம் பொய் சொல்கிறார்கள்? நாம் திருடர்களை பிடிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். மோசடியால் திரட்டிய சொத்துக்களை கையகப்படுத்தக்கூடிய சட்டமூலத்தையும் தயாரித்திருக்கிறோம்.
எனவே அவர்கள் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்கள் கூறும் பொருளாதார முறை தவறானது. மக்கள் மத்தியில் குரோதத்தை தூண்டிவிட்டே திசைக்காட்டிக்கு வாக்குகளை கோருகிறார்கள்.
அதிகாரத்தை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகின்றனர். வரியைக் குறைத்தால் என்ன நடக்கும் என்பதையே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பார்த்தோம். 2020 களில் நான் உண்மையை சொன்னதால் நான் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் வரவேண்டிய நிலைமை உருவாகியது.
எமது வரவு செலவு திட்ட யோசனைகளை நான் வௌியிடுகிறேன். அநுரவும் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும். இன்று என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். நான் விவாதத்திற்குத் தயாராகவே இருக்கிறேன். முதலில் அவர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை முன்னெடுப்பார்களா அல்லது இறக்குமதியில் தங்கியிருப்பார்களா என்பதை நாட்டுக்குத் தௌிவுபடுத்த வேண்டும். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ மூலம் பகிரங்கமாக விவாதம் நடத்தவும் நான் தயாராக இருக்கிறேன்.
எனவே மக்கள் தம்முடைய, தமது பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.
மறுமுனையில் சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவேன் என்கிறார். அநுரவும் நானும் அவரை தோற்கடிக்க 'டீல்' போட்டிருப்பதாகச் சொல்கிறார். அதுவே அவரின் தோல்வியைக் காட்டுகிறது. எவ்வாறாயினும் சஜித்துக்கும் நாமலுக்கும் அளிக்கப்படும் வாக்குகள் அனுர குமார திசாநாயக்கவை பலப்படுத்தும் வாக்குகளாக அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக்கும். மொட்டுக் கட்சியினர் என்னோடு இருக்கின்ற அணியினருக்கும் வாக்களிப்பதே பொறுத்தமாக அமையும். எனவே திசைக்காட்டிக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருப்பவர்கள் முதலில் அவர்களின் ஆட்சியில் ரூபாயின் பெறுமதியைத் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களியுங்கள்.
எனவே, தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது ரூபாயும் கிடைக்காது." என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன;
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களின் ஆதரவை கோரியிருக்கிறார். மக்களும் பெருமளவில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளினதும் மக்களினதும் நம்பிக்கையை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார்.
இதுவரையில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்மொழிந்திருக்கிறார். நாட்டின் கல்வித்துறைக்கும் கல்வியற் கல்லூரி போன்ற விடயங்களை அறிமுகப்படுத்தினார். இவ்வாறு இலங்கையில் புதுமையான முயற்சிகளை சாத்தியமாக்கிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே முடியும்.
தவறியேனும் இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் மூன்று எம்.பிக்களை வைத்துக்கொண்டு ஜனநாயக ஆட்சி செய்யும் இயலுமை அநுரவிற்கு கிடைக்காது. எனவே அவர் தன்னிச்சையான அதிகாரங்களுடன் செயற்பட முயற்சிக்கிறாரா என்ற கேள்விக்குறி உள்ளது. எனவே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை செயற்படுத்தக்கூடிய பாராளுமன்ற அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமே உள்ளது.
இம்முறை பெருமளவான புதிய வாக்காளர்கள் பதிவாகியிருக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த;
"2022 ஆம் ஆண்டில் நாட்டில் பல பிரச்சனைகள் காணப்பட்ட போது தனது கட்சி உறுப்பினர்கள் கைகொடுக்காமையினால் மாற்றுக் கட்சி வேட்பாளர்களுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு வந்தது. நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அந்த சவாலையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
சில அரச ஊழியர்களை பணிப் புறக்கணிப்புக்களுக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு கைவிட்டு விடுவர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கிறார். இன்று பங்களாதேஷில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு வரிசை யுகம் தோன்றியுள்ளது. இதே கஷ்டங்களை இலங்கையும் அனுபவித்தது. அவ்வாறானதொரு கஷ்டத்தை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம். இந்தியா பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பெற்றக் கடனையும் நாம் திருப்பிச் செலுத்தியிருக்கிறோம்." என்றார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க;
"கொவிட் காலத்தில் அப்போதைய அரசாங்கம் வரிச் சுமைகளை குறைத்தமையின் காரணமாகவே இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது. அதேபோல் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்தமையினால் இலங்கையின் விவசாய உற்பத்திகள் முற்றாகச் சரிவைக் கண்டன. அதனால் புதிய வகையிலான விளைச்சல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் பாதிப்பை எதிர்கொண்டன.
அந்த நிலையிலிருந்து மீளவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வர முடிந்தது. குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாத்துறையும் மூச்சுவிட ஆரம்பித்தது.
அதனால் அப்போது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட நிதி முகாமைத்துவம் உள்ளிட்டச் செயற்பாடுகள் தேசிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தது. அதன்படி இப்போது துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அவசியப்படுகிறது. இவ்வருடத்தின் இறுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை 25 இலட்சமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.
அதேபோல் எமது இறக்குமதிகளுக்கு செலுத்தவே வருமானம் போதுமாக இருப்பதால் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதிக வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும் அவர் தயார்படுத்தியுள்ளார். தற்போதும் இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. மேலும் மீள் புதுபிக்கக்கூடிய வலுசக்தி உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம். இவற்றை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருப்பதாலேயே அவரோடு இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறோம்." என்றார்.
முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல;
"சஜித்துக்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவி வாங்க நான் விரும்பவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமக்கு அரசியல் கற்பித்தார். இன்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் பலர் அடுத்த பாராளுமன்ற தேர்தலை வெற்றிகொள்ள முடியுமா என்ற சந்தேகத்துடன் இருக்கிறார்கள். நாம் எந்த கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமது தலைவராவார்.
ரணசிங்க பிரேமதாச இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்ரமசிங்கவிற்கே ஆதரவளித்திருப்பார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அவரைப் பாதுகாத்தார். எனவே பிரேமதாசவின் குடும்பத்தார் நன்றி மறந்தாலும் அவர் உயிரோடு இருந்திருந்தால் நன்றிக்கடன் செலுத்தியிருப்பார்.
எனவே நெருக்கடியால் கஷ்டப்பட்ட மக்களும் அந்த கஷ்டங்களுக்கு முடிவுகட்டிய தலைவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்." என்று வலியுறுத்தினார்.
ஊடகப்பிரிவு
Ranil 24- ரணிலால் இயலும்
12.09.2024
Post a Comment