Headlines
Loading...
ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு -ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எடுத்துரைப்பு

ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு -ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எடுத்துரைப்பு


 ஒற்றையாட்சி நீக்கப்படும் என எந்தவொரு பிரதான வேட்பாளரும் உத்தரவாதம் அளிக்காததன் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின்கீழ் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டுக்கு வருகைதந்துள்ளன.

அதற்கமையய கடந்த வாரம் நாட்டை வந்தடைந்த 26 நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நச்சோ சன்செஸ் ஆமரால் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களில் திருகோணமலை மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கணேசபிள்ளை குகன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை ஸ்ரீபிரசாத், கட்சி செயற்பாட்டாளர் சிந்துஜன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

இச்சந்திப்பின்போது ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படல், வட, கிழக்கு தமிழர் தாயகம் தமிழ்த்தேசமாக அங்கீகரிக்கப்படல், சுவிட்ஸர்லாந்து, கியூபெக் போன்ற பிராந்தியங்களில் காணப்படும் சமஷ்டி அரசியலமைப்பு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல், இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படல் உள்ளிட்ட தமது நிலைப்பாடுகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விளக்கிக்கூறினர்.

 அத்தோடு தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை ஏற்று, ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படும் எனும் உத்தரவாதத்தை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தராத நிலையில் அத்தேர்தலைத் தமிழ் மக்க்ள புறக்கணிக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் எடுத்துரைத்தனர். 


0 Comments: