Headlines
Loading...
ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்: உறுதியளித்த ரவூப் ஹக்கீம்

ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்: உறுதியளித்த ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் பெயரை, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டிலில் முதலாவதாக உள்வாங்குவது தொடர்பில் சாதகமாக பரிசீலித்து வருவதாக, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்வாங்கப்படாமை குறித்து, தேவையற்ற விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை கவலைக்குரியது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“ஹரீஸை வேட்புமனுவில் உள்ளடக்குவதற்கு என்னால் எடுக்கக் கூடிய உச்சகட்ட முயற்சிகளை இறுதி நேரம் வரை நான் எடுத்தேன். ஆனால்ஏனைய வேட்பாளர்கள் இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுப்பை செய்யாத காரணத்தினால், இறுதி நேரத்தில் ஹரீஸுடைய பெயரை உள்வாங்கப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது.

இருந்தபோதிலும், கட்சியின் தேசிய பட்டியலில் அவருடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்துள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை அம்பாறை மாவட்டத்திலும் அதற்கு அப்பாலும் உறுதிப்படுத்துவதற்கு, கட்சியின் பிரதித் தலைவர் என்கிற வகையில்- ஹரீஸ் எங்களோடு முழுமையாக ஒத்துழைக்கின்ற சந்தர்ப்பத்தில், அவரின் பெயரை தேசிய பட்டியலில் உள்ளடக்கும் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்பதையும் நாங்கள் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்” என்றார்.

0 Comments: