சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தன் மீது முன்வைக்கப்பட்டு வரும் அபாண்டங்களுக்கு மனந்திறந்து பதிலளித்தார் அமீர் அலி.
“நான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து மாற்றுக்கட்சிக்கு செல்வேனாக இருந்தால் தனது தாயோடு சினா செய்ததற்கு சமம்” என நான் கூறியதாக இட்டுக்கட்டுபவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (28.10.2024) தனது இல்லத்தில் ஓட்டமாவடி 03ம் வட்டார பள்ளிவாயல், சமுக நிறுவனப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட சமுக நிறுவனங்களின் பிரதிநிதிகளால் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நான் 2004ம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட போது அக்கட்சியை விட்டு நான் வெளியேறுவேனாக இருந்தால் நான் எனது தாயுடன் சேர்ந்ததற்கு சமம் எனக்கூறியதாக தேர்தல் காலங்களிலும் சமூக ஊடகங்களிலும் என் மீது அபாண்டமான பழியை நான் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்து சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக எனக்கு வாக்களிக்காத சிலர் இட்டுக்கட்டிய கதையை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறு இட்டுக்கட்டுபவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என அல்லாஹ்விடத்தில் பாரப்படுத்துகிறேன்.
எப்படிப்பட்ட ஒரு மகனும் தனது தாயுடன் சேர்வதாகச் சொல்வானா? என சற்று சிந்தித்துப்பாருங்கள்.
இதே போன்று, பல குற்றச்சாட்டுக்கள் என் மீது சொல்லப்படுகின்றது. அதற்கும் பதில் சொல்கிறேன்
எனது வீட்டுக்கு ஒரு பெண் வந்து தனக்கு திருமணம் முடிக்கும் வயதில் பெண் பிள்ளை உள்ளது. அதற்கு வீடு கட்ட எதுவுமில்லை என என்னிடம் கேட்டதற்கு, என்னிடம் கேட்டா பிள்ளை பெற்றாய் என நான் கேட்டதாகவும் கதை பரப்பியுள்ளனர்.
எனது வீட்டிற்கு உதவி கேட்டு வந்த எவரிடமும் நான் எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கேட்டதில்லை. நமது மார்க்கத்தின்படி நம்து வீட்டுக்கு உதவி கேட்டு வருபவர்களிடம் அவ்வாறு கேட்க யாருக்காவது மனம் வருமா? இக்கூட்டத்திலுள்ள யாராவது அப்படி கேட்பீர்களா? இதுவும் என் மீது சுமத்தப்பட்ட ஒரு பொய்யே.
அதாவது, யாரிடம் அல்லது எந்த இடத்தில் அவ்வாறு கூறினேன் என்று கேட்டால், அதற்கு எவரிடமும் பதில் இல்லை.
தமிழ்ச்சகோததர்களும் என்னை நேசிக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் சகோதரர்களைப்போல் அதிகம் தமிழ்ச்சகோதரர்களும் என்னை நம்புகிறார்கள்.
ஏனென்றால், என்னிடம் ஏதாவது உதவி என்று கேட்டு வந்தால் முடியுமான விடயமாக இருந்தால் செய்து தருவேன் எனக்கூறுவேன்.
முடியாத விடயமாக இருந்தால் முடியாதென்று கூறி விடுவேன் என்பது என்னை நேசிப்பவர்களுக்குத் தெரியும்.
எனது இறுதி மூச்சிருக்கும் வரை இம்மாவட்டத்தின் கல்விக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன் என்பதை நான் இப்போதும் கூறுகிறேன்.
அது முஸ்லிம், தமிழ் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எனது மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்பதே எனது அவா என மேலும் தெரிவித்தார்
Post a Comment