ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராகவும் மூதூர் தொகுதியின் வேட்பாளராகவும் செயற்பட கட்சி தனக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (05) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்
“1988ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 35,558 வாக்குகளைப் பெற்று நாம் ஐந்து ஆசனங்களையும், 42000 வாக்குகளைப் பெற்று ஈபிஆர்எல்எப் ஐந்து ஆசனங்களையும் பெற்றது.
நான் நேசித்த ஒரு தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பிற்கு பிறகு ஒரு தூய்மையான தலைவராக ரிஷாத் பதியுதீனை நினைத்து அவரோடு பயணித்தேன். ஆனால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து அவருக்காக செயற்படும் படி ரிஷாத் கூறிய போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே, இளைஞர்களின் சமூக ஆதரவை பெற்ற ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் நான் போட்டியிடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரிஷாத் பதியுதீனின் கட்சி சார்பாக அப்துல்லாஹ் மஹ்ரூபின் மகளின் கணவரான வைத்திய ஹில்மி முகைதீன் களமிறக்க அந்தக் கட்சி தீர்மானித்த பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ளாத இவர் மீது, அம்மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தி நிலையைக்கொண்ட பின்னரே வேட்பாளரை மாற்றியதாக அந்தக் கட்சியின் தலைவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment