Top News

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சவால்?


அம்பாறை மாவட்டத்தில் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு வாக்களிக்கும் ஊர் அட்டாளைச்சேனை. எனது அவதானிப்பில் முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் தலைக்கவசம் போன்று பாதுகாப்பளிக்கும் பிரதேசமே 
அட்டாளைச்சேனை.

அக்கறைப்பற்று அந்த நாட்களில் இருந்தே அக்கட்சி மீது அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஒரு காலத்தில் ஒலுவில்,பாலமுனை போன்ற ஊர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தளங்களாக இருந்தாலும் இப்போது அவ்வூர்களும் மாற்றம் குறித்து சிந்திக்க தலைப்பட்டுள்ளன.

பொத்துவிலில் ஆதவன் பாடல் மீதான ஈர்ப்பு மிகவும் குறைந்துள்ளது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் சில வருடங்களுக்கு அங்கே முஷாரப்பின் அரசியல் தாக்கம் செலுத்தும்.

பைசால் காசீமுக்கு சீட் கொடுக்காத பட்சத்தில் நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஆதிக்கம் கடினமாகி விடும். ஏலவே, பிரதேச சபை மயில் வசமாகி இருந்தது.

சம்மாந்துறையில் மன்சூர் முஸ்லிம் காங்கிரஸை பகீரத பிரயத்தனம் செய்து காப்பாற்றி கொண்டிருக்கின்றார். அங்கு கணிசமான வாக்குகள் இருந்தும் கடந்த முறை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது துரதிர்ஷ்டம்.
சாய்ந்தமருது 2017 களிலே மரத்தை சாய்த்து விட்டது. தற்போது வேர் விடுகிறது. இருப்பினும் தற்போது மருதூர் அனைத்து கட்சிகளினதும் வாக்கு பசிக்கு இரை தேடும் வேட்டைக் களமாகியுள்ளது.

கல்முனை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஹரீஸ் எனும் தனி நபருக்காய் முஸ்லிம் காங்கிரஸ் மீது அபிமானம் கொண்டிருக்கின்றனர். அவரில்லையேல் அங்கு கட்சி இல்லை என்கிற நிலைவரம்.

ஆக, திகாமடுல்லையில் அட்டாளைச்சேனையை தவிர மற்ற அனைத்து பிரதேசங்களிலும் அக் கட்சி மீது ஆத்மார்த்த விருப்பம் கொண்டு மக்கள் வாக்களிக்கும் மனோ நிலையில் இல்லை.

எனது ஊகிப்பின் படி, இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் சார்பான மூன்று பிரதான வேட்பாளர்களை அடையாளப்படுத்த முனைந்தால் அதில் அட்டாளைச்சேனையில் ஒருவரை அடையாளபடுத்தியாக வேண்டும்.அப்படியெனில் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு அந்த வாய்ப்பு கிட்டலாம்.

ஊடகவியலாளர் 
எஸ்.ஜனூஸ்

Post a Comment

Previous Post Next Post