Headlines
Loading...
 தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து மாணவி தற்கொலை; அல்ட்ரா டவர் சம்பவத்துடன் தொடர்பா?

தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து மாணவி தற்கொலை; அல்ட்ரா டவர் சம்பவத்துடன் தொடர்பா?


அம்னா இர்ஷாத்

மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 16 வயதான, கொள்ளுபிட்டி பகுதியை சேர்ந்த சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும், வர்த்தக குடும்பம் ஒன்றினை சேர்ந்த ரத்யா குணசேகர எனும்  மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ள‌தாகவும், பொலிஸ் தடயவியல் பிரிவுக்கு கிடைத்துள்ள தடயங்கள் பிரகாரம், இது தற்கொலை சம்பவமாக  தெரிவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

அண்மையில் கொழும்பு 02, அல்ட்ரா டவர் சொகுசு தொடர்மாடி குடியிருப்பிலுருந்து விழுந்து உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்களின்  நெருங்கிய தோழியே, இவ்வாறு நேற்று தாமரை கோபுரத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. அம்மாணவியின் தந்தையின் வாக்கு மூலம் பிரகாரம், அல்ட்ரா டவர் சம்பவம் முதல், மகள் மன அழுத்தத்தில் இருந்துவந்த்தமை தெரியவந்துள்ளது.

நேற்று மாலை ( 7) 3.30 மணிக்கும் 4.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்  தாமரை கோபுரத்தில் இருந்து குறித்த மாணவி பாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் சி.சி.ரி.வி. காணொளிகள் கிடைத்துள்ளன. 29 ஆவது மாடியிலிருந்து குறித்த மாணவி குதிப்பது அதில் பதிவாகியுள்ளதாக கொழும்பு தாமரை கோபுரம் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்தது.

தாமரை கோபுரத்தின், பேர வாவி அமைந்துள்ள பகுதியை அண்மித்து மாணவியின் சடலம் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறியுள்ள நிலையில், சட்ட வைத்திய தேவைகளுக்காக சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.


குறித்த சிறுமியின் பாடசாலை பையும், அவரது காலணிகளும் தாமரை தடாகத்தின்  பார்வையாளர் பகுதியில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. புத்தகப் பையில் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டிருந்த நிலையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

 அந்த தொலைபேசியை ஒன் செய்த போது, மாணவியின் தந்தை அந்த தொலைபேசிக்கு அழைப்பெடுத்துள்ள நிலையில், அதனை வைத்தே  அவரின் அடையாளத்தை பொலிசார் உறுதி செய்துள்ளனர். வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் தந்தை இவ்வாறு அழைப்பெடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

 நேற்று காலை, குறித்த மாணவியை தந்தையே பாடசாலைக்கு அழைத்து சென்று விட்டுள்ளதுடன், மீண்டு மதிய நேர உணவினையும் எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்.

 பாடசாலை விட்டதும் குறித்த மாணவி இவ்வாறு தாமரை தடாகத்துக்கு வந்து அங்கிருந்து பாய்ந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 எனினும்  அவ்வாறு அவர்  பாய்வதற்கான காரணம் இதுவரை வெளிப்ப‌டுத்தப்படவில்லை. அதனை கண்டறிய தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 பாடசாலை விட்டதும் அவ்வாறு தாமரை கோபுரத்துக்கு அவர் யாருடன் வந்தார், தனியாக வந்தாரா, அப்போது ஏதும் பிரச்சினைகள் ஏற்ப‌ட்டனவா என்பதையெல்லாம் கண்டறிய சி.சி.ரி.வி. காணொளிகள் மற்றும் அறிவியல் தடயங்களை வைத்து மருதானை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

0 Comments: