ஜேர்மன் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
ஜேர்மன் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான ஜம்ஷிட் ஷர்மாட் (Jamshid Sharmahd, 69) என்பவரை துபாயிலிருந்து கடத்திவந்து சிறையிலடைத்திருந்தது ஈரான் அரசு.
2008ஆம் ஆண்டு, ஈரானிலுள்ள Shiraz என்னுமிடத்திலுள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்துக்கும் ஜம்ஷிடுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டி, அவருக்கு 2023ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜம்ஷிடின் மகளான Gazelle, தனது தந்தைக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரிவந்தார்.
ஆனாலும், நேற்று, திங்கட்கிழமை, ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனையை நிறவேற்றியுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக் ஜேர்மன் இரட்டைக்குடியுரிமை கொண்டவராக ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஜம்ஷிட் தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்கக்கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்னேஷனல் அமைப்பும், ஜம்ஷிட் தனது தரப்பு நியாத்தை எடுத்துரைக்கக்கூட வாய்ப்பளிக்கப்படாமல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Post a Comment