எம்.என்.எம். யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.
முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களிலிருந்து பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டு இடதுசாரி கொள்கையுடைய ஒரு புதிய ஜனாதிபதி நாட்டிற்கு தெரிவாகியுள்ள நிலையில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம்.
அரசியலில் ஒவ்வொருவருக்கும் விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால், அவைகளால் முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறித்து நாதியற்ற சமூகமாக மாற்றுவதற்கு பேரினவாத சக்திகள் அன்று தொடக்கம் இன்றுவரை முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு நமது சமூகத்தை நாதியற்ற சமூகமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் சமூகத்திலுள்ள அனுபவமுள்ள அரசியல் தலைமைகளை அகற்றுவதனூடாக தங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதற்காக திட்டங்களை வகுத்து செயற்படுகிறார்கள். கடந்த காலங்களிலும் இவ்வாறு மேற்கொண்ட சதிகளை முறியடிச்சி ரவூப் ஹக்கீமின் வெற்றியை கண்டி மக்கள் உறுதிப்படுத்தினார்கள்.
அதன் பயனாக கோட்டாபாய ஆட்சியில் இனவாத போக்கின் உச்சகட்டமான ஜனாஸா எரிப்பு உற்பட பல்வேறு மோசமான செயற்பாடுகள் நடந்தபோது பாராளுமன்றத்திலும்,அதற்கு வெளியிலும், சர்வதேச மட்டத்திலும்,தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களை பயன்படுத்துவதிலும் தனது மொழிப்புலமை,அரசியல் அனுபவம்,சர்வதேச அறிமுகம் போன்றவை ரவூப் ஹக்கீமுக்கு இருந்தமையினால் இவ்வாறான மோசமான செயல்களை வெளிச்சம் போட்டுகாட்டி,அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, முஸ்லிம் சமூகத்தின் நீங்கா துயராக இருந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.
எதிர்கட்சியிலிருந்து நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் காத்திரமான பங்களிப்பை இக்கட்டான காலப்பகுதியில் வழங்கியிருந்தார் என்பதை யாரும் மறக்கமுடியாது.
அமையவிருக்கும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சட்டமூலங்கள்,செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் நிச்சயமாக அரசியல் முதிர்ச்சி கொண்ட ரவூப் ஹக்கீமின் அவசியம் உணரப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எனவே தான், மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக டெலிபோன் சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரவூப் ஹக்கீமைத் தோற்கடிக்க வேண்டுமென என மாற்றம் தேவை எனும் கோசத்தோடு பேரினவாதிகளும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான மோசமான செயலுக்கு உடந்தையாகாது, கடந்த காலங்களில் ரவூப் ஹக்கீம் நாட்டுக்காக,சமூகத்திற்காக செய்த பணிகளை அறிந்திருக்கும் நாம் மீண்டும் அவரை தெரிவு செய்து எமது உறுதியான குரலாக பலப்படுத்துவோம்.
வீண் விமர்சனங்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாகவும், சிலர் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள சிலரை தூண்டி செய்யும் காரியமாக மாறியிருக்கிறது. இவ்வாறான விமர்சனங்களுக்கு காதுகொடுப்பதனுடாக இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை இழந்து தவிக்கும் ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடக்கூடாது என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும். By : எம்.என்.எம். யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.
Post a Comment