அம்னா இர்ஷாத்
இலங்கையின் பல பகுதிகளில் நேற்று ( 7) அதிகாலை முதல் மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளது. அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் இந்த தொடர் மழை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இத்தகைய மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்ப்பதாக கால நிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்த மழையின் விஷேட அம்சம் என்னவென்றால், குறுகிய நேரத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும். அதே நேரம் திடீரென தற்காலிக கடும் காற்று வீசும். இடி, மின்னல் ஏற்படும். சுமார் 100 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சியை இவ்வகையான சந்தர்ப்பங்களில் எதிர்ப்பார்க்கலாம்.’ என கால நிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
மழைக்கான காரணம் என்ன?
அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் வணிகக் காற்றுகள் ஒடுங்கும் பிரதேசம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கால நிலை அவதான நிலையம் இன்றைய தினத்துக்கான ( 8) கால நிலை அறிக்கையில் கூறியுள்ளது.
வணிகக் காற்று அல்லது தடக்காற்று என்பது நிலநடுக்கோட்டு வெப்பமண்டல வளிமண்டலத்தின் கீழடுக்கின் கீழ்ப்பகுதியில் வீசும் காற்றோட்டமாகும். புவியின் வடஅரைக்கோளத்தில் வடகிழக்காகவும் தென்அரைக்கோளத்தில் தென்கிழக்காகவும் இக்காற்று வீசும்.
இந் நிலையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்தது.
எங்கு மழை பெய்யும் ?
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கால நிலை அவதான நிலையம் கோரியுள்ளது.
தாழ் நிலப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை :
இதே நேரம் தொடர்ச்சியான மழையானது, வெள்ள நிலைமையை ஏற்படுத்த வல்லது என்பதால் தாழ் நிலங்களில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு கால நிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மண் சரிவு அபாயம் :
திடீர் மழை காரணமாக சில பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை , மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment