Top News

மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் குணசிறியின் சேவை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானம்

 



அம்னா இர்ஷாத்

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர்யகமாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய ஜே.எம். குணசிறியின் சேவையை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை நேற்று (7) மாலை கூடிய அமைச்சரவை எடுத்ததாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார்.

அரசின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனமாக மது வரித் திணைக்கள‌ம் பார்க்கப்ப‌டும் நிலையில், அதன் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மை தொடர்பிலான விடயங்களை உறுதி செய்ய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் படி வெற்றிடமாகியுள்ள மதுவரித் திணைக்கள‌த்தின் ஆணையாளர் நாயகமாக பதில் கடமைகளை முன்னெடுக்க நிதி அமைச்சின் நிறுவன தொடர்பாடல் தொடர்பிலான மேலதிக செயலாளர் 2 யூ.டி.என். ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான வழக்குக்கு முகம் கொடுத்துள்ள மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய ஜே.எம். குணசிறி உள்ளிட்ட அவ்வழக்கின் பிரதிவாதிகள் சிலர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு பயணத் தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்றுக்கு இன்று நகர்த்தல் பத்திரம் ஒன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக புதிய மதுபான உரிமங்களை வழங்க வேண்டாம் என உயர் நீதிமன்ற‌ம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை மீறி செயற்பட்டதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய ஜே.எம். குணசிறி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற‌ அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post