Top News

தாஜுதீன், லசந்த, மத்திய வங்கி Bond மோசடி, மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடி: விசாரணைகள் மீண்டும் ஆரம்பமானது

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மற்றும் அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட 7 குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த நிறுத்தப்பட்ட குற்ற விசாரணைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடலில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நிறைவு செய்து சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை தரம் பாராமல் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எக்னெலிகொட மற்றும் லசந்த விக்ரமதுங்க காணாமல் போனமை தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பணிப்புரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் 11 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணையை முடித்து வைக்க உத்தரவு கிடைத்துள்ளது.
பாரிய நிதி மோசடி என அறியப்படும் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்து சந்தேக நபர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post