தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!

NEWS
0


சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இவர் மின்னஞ்சல் மூலம் உத்தியோகபூர்வமாக நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது இராஜினாமாவை உறுதிசெய்த இவர் மேலும் தெரிவித்ததாவது,

சிறுபான்மை மக்களின் நலன்கள் சார்ந்த பிரதிநிதித்துவ/ கட்சி அரசியலில் ஏற்பட்ட விரக்தியின் விளிம்பில் செயலாளர் நாயகம் பதவியை துறந்துள்ளேன்.

சிறுபான்மை மக்களின் தேசியத்தை பெருந்தேசிய கட்சிகள் ஏற்று கொள்வதாக இல்லை. முஸ்லிம்களின் தேசியம் பற்றி முஸ்லிம் கட்சிகள் பேசுவதாக இல்லை என்பது வேறு விடயம்.

ஆனால் தமிழ் மக்களின் தேசியத்தை பற்றி தமிழ் கட்சிகள் பேசி கொண்டே இருக்கின்றன. ஆனால் பெருந்தேசிய கட்சிகள் அவற்றை கண்டு கொள்வதாகவோ, கருத்தில் எடுப்பதாகவோ இல்லை. 

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எந்த பெருந்தேசிய கட்சியும் தருவதாக இல்லை. ஆளும் தேசிய மக்கள் சக்திகூட இப்பொழுது இன்னொரு முகத்தையே காட்டி கொண்டிருக்கின்றது.

தேர்தலுக்கு முன்னர் வேறொரு முகத்தை காட்டியவர்கள் இப்பொழுது இன பிரச்சினை தீர்வுக்கான முன்னெடுப்புகளில் அலட்சியம் காட்டுகின்றனர் என்றே தோன்றுகிறது.

அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான முன்னெடுப்புகளில் பின்னடித்து கொண்டிருக்கின்றனர் என்று விளங்குகின்றது. அரச கரும மொழிகள் தொடர்பான கொள்கையை அமுலாக்கம் செய்வதில்கூட அக்கறை இல்லாமல் நடந்து கொள்கின்றனர் என்பது எனது அவதானம் ஆகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அமைச்சர்களின் கருத்துக்கள் நான் மேற்சொன்ன விடயங்களுக்கு சான்று சொல்வனவாக உள்ளன. எனவே சிறுபான்மை மக்கள் நலன் சார்ந்த பிரதிநிதித்துவ/ கட்சி அரசியலை தொடர்வதால் எந்த பயனும் கிட்ட போவதில்லை என்கிற முடிவுக்கு நான் வந்து விட்டேன்.

மாறாக அழுத்த குழுவாக செயற்படுவதன் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்கள், உரிமைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை குறைந்த பட்சம் உயிர் வாழ வைக்க முடியும் என நம்புகிறேன். நான் பிரதிநிதித்துவ/ கட்சி அரசியலில் இருந்து விலகி விட்டாலும்கூட எமது மக்களுக்காக தனிப்பட்ட வகையிலும், அழுத்த குழுவாகவும் குரல் கொடுத்து கொண்டே இருப்பேன். என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top