Headlines
Loading...
கறைபடுத்தப்படும் கரையோர மாவட்டம்

கறைபடுத்தப்படும் கரையோர மாவட்டம்



பிறவ்ஸ்

கரையோர மாவட்டத்துக்கு இணக்கம் தெரிவித்தால் வடக்கு, கிழக்கு இணைப்பு நாங்கள் எதிர்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன. அண்மையில் கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்காக இணக்கம் காணப்பட்டதாக ஊடகவியலாளர்கள் சிலர் இந்த செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கல்முனை வாழ் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அபிவிருத்தியில் காட்டப்படும் பாகுபாடு, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் போன்ற பிரச்சினைகளையே முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து பேசினர். இதை ஏன் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் பேசவேண்டும் என்பதற்கு அன்றைய சந்திப்பில் அவர்களே விளக்கமும் வழங்கியிருந்தனர்.
கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறப்படும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. அந்த சந்திப்பிலேயே தமிழர் தரப்பு அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைத்தது.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் கரையோர மாவட்டம் குறித்து பேசும்போது, தமிழ்த் தரப்பினர் இடைமறித்து தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் உங்களுக்கு விருப்பமில்லையா என்று கேட்டனர். இதற்கு முஸ்லிம் தரப்பில் ஒரு தடை இருப்பதாகவும், அதனை நிவர்த்திக்கும் வகையிலேயே தமிழ்த்தரப்பு தங்களது நியாயங்களை முன்வைத்தது.
கரையோர மாவட்டம் வழங்கப்பட்டால், அது தமிழ்பேசும் சிறுபான்மை சமூகத்துக்கு நன்மைபயக்கும் விடயமாக அமையும். அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை சமூகம் குடியேற்றப்படுவதால், சிறுபான்மை மக்களாகிய தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு கரையோர மாவட்டம் அவசியம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவான பின்னர் தமிழ் பிரதேச செயலகம் தானாகவே தரமுயர்த்தப்படும் என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரதேசத்தை தரமுயர்த்துவதற்கு இந்த இடத்திலேயே அனுமதி வழங்கவேண்டுமென தமிழ்த்தரப்பினர் பிடிவாதமாக இருந்தபோது, இது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான இடமல்ல. பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கான அடித்தளமே இங்கு இடப்பட்டதாக பிரதியமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டினார். அத்துடன் தமிழ்த்தரப்பின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றுகூடுவோம் என்று தெரிவித்தார்.
இவ்வாறு முழுக்க முழுக்க கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசப்பட்ட இடத்தில் கரையோர மாவட்டத்துக்காக வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்த்தரப்பு சிறுபான்மை குழுக்களுடன் பேசப்பட்டதாக கூறப்படுவது நகைப்புக்குரிய விடயம். கரையோர மாவட்டம் தொடர்பில் தெளிவில்லாதவர்களினாலேயே இவ்வாறு பேசமுடியும். இந்த செய்திகளை ஆதாரமாக வைத்து, கரையோர மாவட்டம் என்றால் என்னவென அரசியல்வாதிகளுக்கு வியாக்கியானம் கூறுகின்ற அளவுக்கு இவ்விடயம் மலினப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் பிரதேச (வடக்கு) செயலகத்தை தரமுயர்த்துவதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென அமைச்சர் ரவூப் ஹக்கீமும், பிரதியமைச்சர் ஹரீஸும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் கரையோர மாவட்டத்தை வழங்குவதில் தமிழ்தரப்பும் முஸ்லிம் தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்பட்டது. கரையோர மாவட்டம் கிடைத்தால், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மாத்திரமின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பது வெள்ளிடைமலை.
இதன்போது, வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்து தமிழ்த்தரப்பு பிரஸ்தாபித்தபோது பிரதியமைச்சர் கூறிய பதில் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு கூறியது பின்வருமாறு,
ஹரீஸ்: தலைவரும் நானும் வட, கிழக்கு இணைப்புக்கு ஆதரவு என்றும் அதற்கு சோரம்போய்விட்டோம் என்று எங்களுக்கு எதிரானவர்கள் பேசுகிறார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கரையோர மாவட்டம், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு (இதில் தமிழ் பிரதேசங்கள் உள்ளடங்கவில்லை) என்பவற்றை நிபந்தனையாக வைத்து வட, கிழக்கு இணைப்புக்காக முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் பேசியிருக்கிறது.
தமிழ்தரப்பு: அப்படியானால், வட-கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவில்லை என்று நீங்கள் பகிரங்கமாக பத்திரிகைளில் செய்தி வெளியிட்டிருக்கிறீர்களே?
ஹரீஸ்: இல்லை. நீங்கள் அதை தெளிவாக விளங்கவேண்டும். ஷநிபந்தனையற்ற ரீதியில்| என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். வட-கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ரீதியில் ஆதரவில்லை என்றுதான் நான் கூறியிருக்கிறேன்.
இதன்போது ரவூப் ஹக்கீம், வட-கிழக்கு இணைப்பு குறித்தோ, கரையோர மாவட்டம் குறித்தோ, நிலத்தொடர்பற்ற அலகு குறித்தோ எதுவும் பேசவில்லை. ஆனால், கரையோர மாவட்டம் தந்தால் வட-கிழக்கு இணைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் சொல்லப்பட்ட அரசியல் பின்புலம், அதன் சாதகத்தன்மை தெரியாமல் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடுவதற்காக கரையோர மாவட்டத்துக்கு பரகமாக வட, கிழக்கு இணைப்பு ஆதரவு தெரிவிப்பதாக செய்திகள் இட்டுக்கட்டப்பட்டுள்ளன.
தமிழ்தரப்பின் கேள்விக்கு முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இவ்வாறு சொல்லப்பட்டதை, இன்று சிலர் தங்களது கட்சி அரசியலுக்காக, ஒட்டுமொத்த நிகழ்வையும் தங்களுக்கு ஏற்றதுபோல மாற்றிக்கொண்டு சாதகமாக பயன்படுத்த முயன்றுவருகின்றனர். வட, கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு என்று பிரசாரம் செய்தால், கிழக்கில் அக்கட்சிக்கு இருக்கும் ஆதரவை குறைத்துவிடலாம் என்ற நிகழ்ச்சிநிரலியே இந்த செய்தி இந்தளவுக்கு திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவெல்லாம் இருக்கட்டும், கரையோர மாவட்டம் என்பது மொழிவாரியான ஒரு நிர்வாக அலகு. ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதனை இலகுவாக பெறமுடியும். இதற்குப்போய் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறுபான்மை குழுவுடன் பேசவேண்டும் என்ற கேள்விக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் அவருடைய பேச்சிலேயே விளக்கம் வழங்கியுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முஸ்லிம்கள் கோரி நிற்கின்ற கரையோர மாவட்டத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அம்மாவட்டத்தை தென்கிழக்கு அதிகார அலகாக உள்ளடக்கப்படுவதை நாம் வன்மையாக எதிர்ப்போம். இதற்கு ஆதரவாக செயற்படும் சகலரையும் நாங்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் பார்ப்போம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர் என்று கடந்த வருடம் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.
உங்களது கட்சி சார்பான ஒருவரே இப்படிப் பேசியியிருக்கின்ற சூழ்நிலையில், தமிழ் மொழிவாரியான ஒரு நிர்வாக அலகை பெறுவதற்கு தமிழ்தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் கரையோர மாவட்டத்தைப் பெற்று, இங்குள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் இலகுவாக தீர்த்துக்கொள்ளலாம் என்று பேசப்பட்டது.
இந்த விடயத்தை இவ்விடத்தித்தில் விவாதிக்காமல் கரையோர மாவட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி., தலைவர் சம்பந்தன் ஐயா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்துடன் கல்முனை பிரதிநிதிகள் சார்பாக நீங்களும் ஒரு மேசையில் அமர்ந்து பேசினால், ஒரு ஆரோக்கிமான தீர்மானத்து வரலாம் என்று பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
இங்குள்ள பிரச்சினைகளை சம்பந்தன் ஐயாவிடம் நாங்கள் இப்படி கதைக்க முடியாது. நாங்கள் போகும்போதே அவர் சொல்வார், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிட்டும், தேங்காய்ப்பூவும் போல இணைந்துதான் இருக்கவேண்டும். இந்தப் பிரச்சினைகளை என்னிடம் கதைக்கவேண்டாம். தயவுசெய்து கல்முனை மக்களை குழப்பவேண்டாம் என்று சம்பந்தன் சொல்வதாக என தமிழ்த்தரப்பினர் தெரிவித்தனர்.
கரையோர மாவட்டம் தொடர்பில் நாங்கள் சம்பந்தன் ஐயாவிடம் பேசியபோது, நீலாவணை வரைதான் முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டத்தை கோருகின்றது. ஆனால், நாங்கள் பட்டிருப்பு தொகுதிக்கு அப்பால் கொடுப்பதற்கு செல்வநாயகம் ஐயாவின் காலத்திலேயே பேசிவிட்டோம் என்று அவர் கூறுகிறார். தமிழர்களும் முஸ்லிம் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்பதில் சம்பந்தன் ஐயா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக தமிழ்த்தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தீவிரமாக முனைப்புக்காட்டி வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதேவேளை, கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் காலத்திலிருந்து குரல்கொடுத்து வருகிறது. அதனைப் பெறுவதற்காக காலம் பல தடவைகள் கனிந்து வந்துள்ளபோதும் அவை விரும்பத்தகாத சில சக்திகளினால் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸன் அலி, ரவூப் ஹக்கீமுடன் இணைந்து கரையோர மாவட்டத்தைப் பெறுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டுவந்தார். அண்மையில் நிந்தவூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து, கரையோர மாவட்டத்தைப் பெறுவதில் ரவூப் ஹக்கீம் அசிரத்தையாக இருந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், மறுநாள் அதே நிந்தவூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஹக்கீம் அதனை மறுத்திருந்தார்.
கரையோர மாவட்டத்தை மறந்துவிட்டோம் என்று மிகப்பெரியதொரு அபாண்டத்தை என்மீது சுமத்த வருகிறார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் நெருக்கமானதொரு சினேகத்தை பேணிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதனை லாவகமாக பெற்றெடுப்பதற்காக வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். இதனை வைத்து கரையோர மாவட்டத்தை மறந்துவிட்டதாக எங்கள்மீது பழிபோட முடியாது. அறிக்கை மன்னர்களாக இருந்துகொண்டு நாங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, வட-கிழக்கு இணைப்புக்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் பேசவேண்டும். வடக்கும், கிழக்கும் ஒரு மாகாணமாக இணைந்தால், சிறுபான்மை மக்களின் ஆளுகையின் கீழிருக்கின்ற இரு மாகாணசபைகள் இல்லாமல்போய் ஒரு மாகாணசபைதான் இருக்கும். அந்த மாகாணசபைக்கு ஆளுநர் நியமனத்திலிருந்து அதிகாரிகள் நியமனங்கள் வரை தமிழ், முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுப்புடன் செயற்படுமா என்பது மற்றொரு பக்கமுள்ள கேள்விக்குறி. எல்லாம் இருக்கட்டும், இதற்கு முதலில் அரசாங்கம் அனுமதி வழங்குமா, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது எல்லாமே எட்டாக்கனிதான்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், முஸ்லிம்களின் அபிலாசைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் சம்மதம் இல்லாமலேயே வட-கிழக்கு இணைக்கப்பட்டது. அப்போது கிழக்கில் 33 சதவீதமாகவும், வடக்கில் 5 சதவீதமாகவும் இருந்த முஸ்லிம்கள் அந்த இணைப்பு மூலம் 17 சதவீதமாக மாற்றப்பட்டு முஸ்லிம்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டது. வட, கிழக்கில் மலினப்படுத்தப்பட்ட மக்களாக முஸ்லிம்கள் மாற்றப்பட்டனர்.
இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களில் 72 பேரில் 17 பேர் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அங்கத்துவம் பெற்றிருந்தனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முக்கிய காரணமாக இருந்த டிக்ஷித் கூட, வட-கிழக்கு இணைப்பு மூலம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டிருந்தார்.
வட-கிழக்கு இணைப்பு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் 1997ஆம் ஆண்டு வெளியிட்ட, ஷதென்கிழக்கு பிராந்தியம் மூன்று சமூகங்களினதும் ஒற்றுமைக்கான முன்மாதிரிப் பூமி| என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஷமுஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் நிபந்தனையற்ற முறையில் வடக்கு, கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்றே சொல்லி வந்திருக்கின்றது. சிங்கள கட்சிகளின் வடக்கு, கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்ததில்லை| என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைப்பாட்டைத்தான் முஸ்லிம் காங்கிரஸும் இப்போது கொண்டிருக்கிறது. நடைமுறைச்சாத்தியம் மிகமிக குறைவாகவுள்ள வட-கிழக்கு இணைப்பில் தீவிரம் காட்டிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் ஏன் பேசவேண்டும் என்பதற்கு மறைந்த தலைவரின் இந்தக் கருத்து மாத்திரம் போதுமானதாக இருக்கும். வட-கிழக்கும் ஒருவேளை இணைந்தால், நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு (மாகாணம்) வழங்கப்படவேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் அன்றும், இன்றும் ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கிறது.
அதேவேளை, வடக்குடன் கிழக்கு மாகாணம் இணையக்கூடாது என்பதில் கிழக்கு மாகாண பெரும்பான்மை முஸ்லிம்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர். இதன்பின்னால் பல அரசியல் சக்திகள் இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியாகவேண்டும். முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்க அப்பால், பிரதேச அரசியல் செய்யும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள், வட-கிழக்கு இணைப்புக்கு எதிராக மக்களை திறன்பட பன்படுத்தி வருகின்றனர்.
இலங்கையின் 9 மாகாணங்களில் வடக்கு மாத்திரமே சிறுபான்மை மக்களின் ஆளுகையின் கீழ் இருக்கிறது. அங்கு என்ன சூட்சுமங்கள் நடந்தாலும் வட மாகாணம் தமிழர்களின் கையை விட்டு ஒருநாளும் நழுவிப்போகாது. அதுபோன்று முஸ்லிம் ஆளுகையின் கீழ் எந்தவொரு மாகாணமும் இல்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, முஸ்லிம் கட்சிகள் ஏதாவதொரு கட்சியுடன் இணைந்துதான் மாகாணசபையில் ஆட்சியமைக்கும் நிலைமை காணப்படுகிறது.
இந்நிலையில், வட-கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டால் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு (மாகாணம்) உருவாக்கப்பட்டால் மாத்திரமே அது முஸ்லிம்களின் தனித்துவ ஆளுகையின் கீழ் வருகின்ற ஒரு மாகாணசபையாக இருக்கும் என்பதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கென தனியானதொரு மாகாணசபை கிடைத்தால், அதன்மூலம் கிடைக்கும் பயன்களை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
மறைந்த தலைவர் அஷ்ரபின் வழிகாட்டலின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதா அல்லது அதனை கைவிடுவதா என்பதை காலம்தான் நிர்ணயிக்கவேண்டும். அதேவேளை, மொழிரீதியான கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கு தமிழ் - முஸ்லிம் சமூகம் ஒருமித்த கருத்துடன் செயலாற்றி தங்களுக்கான அரச இயந்திரத்தை காலடிக்கு கொண்டுவரச் செய்யவேண்டும்;.
(நன்றி: வீரகேசரி 19.03.2017)