அம்பாறையில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க ஏற்பாடு



வி.சுகிர்தகுமார் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்று கூறப்படும் எண்ணத்தை மாற்றி அமைக்கவுள்ளதாகத் தெரிவித்த கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், அம்பாறையில் தமிழர் பிரதேசத்தில் தனியார் பல்கலைக்கழகத்தை  நிறுவுவதற்கான முயற்சியை எடுத்துள்ளதாகவும்; கூறினார். தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள வீதிகளை கார்ப்பட் வீதிகளாக புனரமைக்கும் வேலை ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்டது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 60 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'அரசாங்கத் துறையில் அனைவருக்கும் வேலை  வாய்ப்புகள்  வழங்கப்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத விடயமாகும். ஆகவே, இங்கு தனியார் பல்கலைக்கழகத்தை அமைத்து, பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன்,  தொழில் ரீதியாக இளைஞர், யுவதிகளைப் பயிற்றுவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். மேலும், எமது மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அனைத்து நகர்வுகளும்; முன்னெடுக்கப்படும்' என்றார்.