Headlines
Loading...
கொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்!

கொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்!



கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்

கட்டார் சனாயா பகுதியில் Asia Town – Grand Mall அமைந்துள்ள எமது உணவகம் ஒன்றில் நடை பெற்றதாக ஒரு செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதன்படி எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஒரு முழு எலி இருந்ததாகவும், அவ்வாறு பரிமாறப்பட்ட உணவு கொத்துரொட்டி அல்லது புரியாணி என செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இன்னும் சில செய்திகளில் நாம் சமைத்து வழங்கிய கறிக்குள் எலி கிடந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சிலர், அவ்வாறு உணவை உட்கொண்ட நபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஆஸ்பத்திரியில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர்.
இவ்வாறு பரப்பப்பட்ட செய்திகள் பல பொய்யானவையாகும். அந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதனை தெளிவு படுத்துவது எமது கடமையெனக் கருதுகின்றோம்.
கட்டார் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு சட்டங்கள் எவ்வளவு தூரம் இறுக்கமானது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான சூழலில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது உணவகம் சிறப்பான சேவையினை வழங்கி வருவதும் எல்லோருக்கும் தெரியும். நாம் உணவு தயாரிக்கும் விடயத்திலும் அதனைப் பராமரிக்கும் முறையிலும் உயர்ந்த தரத்தினைப் பேணுவதன் மூலமாகவே எம்மால் இத்தனை நீண்ட காலமாக சிறப்பான சேவைகளை வழங்க முடிகிறது; நிறைவான வாடிக்கையாளர்களையும் பெற முடிந்திருக்கின்றது .
அத்தோடு கட்டார் நாட்டு ‘பலதியா’வினால் சர்வதேச பிரசித்தி பெற்ற உணவகங்கள் கூட குறிப்பிட்ட காலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக மூடப்படுகின்றன என்பதும் எல்லோரும் அறிந்ததே. 
எமது உணவகம் தொடர்பாக பரப்ப்பபடும் சம்பவம் தொடர்பில் நாம் தற்போது முழுமையாக ஆராய்ந்து முதற்கட்ட விசாரணைகளை முடித்திருக்கிறோம். அதன்படி குறிப்பிட்ட சம்பவமானது இவ்வாறுதான் நடந்துள்ளது. அத்தோடு, எமது நிறுவனம் 24 மணிநேரமும் முழுமையாக CCTV கமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக உணவு உற்பத்தி செய்யப்படும் மற்றும் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் முழுமையாக கமராவில் பதிவு செய்யப்படுகின்றன. எமது நிர்வாகம் அந்தப்பதிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது. 
கடந்த 27.02.2017அன்று காலை08.40AM மணியளவில் ஒரு வாடிக்கையாளர் உள்ளே வருகிறார். அவர் நேரடியாக கழிப்பறைக்குச் சென்று பல நிமிடங்கள் கழித்து வந்து தனக்கான உணவை ஓடர் செய்கிறார். பராட்டாவும் பருப்புக் கறியுமே அவர் ஓடர் செய்த காலை உணவாகும். பின்னர் ஒரு ஆசனத்தில் போய் அமர்ந்து கொள்கிறார். போதுமான இருக்கைகளைக் கொண்ட எமது உணவகத்தில் வழமையாக எல்லோரும் விரும்பி அமரும் இடங்களில் அல்லாமல் ஏணிப்படி அருகேயுள்ள ஒதுக்குப்புறமான ஒரு மேசையிலேயே அவர் அமர்கிறார்.
பருப்புக்கறியோடு சேர்த்து பராட்டாவை உண்டு கொண்டிருந்த அவர் பின்னர் ஒரு உழுந்து வடை தருமாறு கேட்கிறார். அதுவும் வழங்கப்படுகிறது. தொடர்ந்தும் அவர் சாப்பிடுகிறார். அவ்வேளை , வாடிக்கையாளர்கள் ஒரு சிலரே கடையில் இருந்ததனால், உணவு பரிமாறுபவர் அவர் அருகே நின்று அவரை கொஞ்சம் கூடுதலாக கவனிக்க முற்படுகிறார். இதற்கு இடம் கொடாமல், ஏதாவாது எடுத்து வரும் படி கூறி அந்த ஊழியர் அருகில் நிற்பதனை தவிர்க்க முயற்சிக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கழிப்பறைக்குச் செல்கிறார். கழப்பறைக்கு நுழையும் வேளை தனது கால்சட்டை பையில் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுக்கிறார். 
பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து வெளியே வரும் அவர் நேரடியாக பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று தான் சாப்பிட்ட வடையில் எலி ஒன்று இருந்ததாக முறையிடுகிறார். அவ்வாறு எலியொன்று இருப்பதனையும் காட்டுகிறார். எவ்வித பதட்டமோ ஆத்திரமோ இன்றி மிக நிதானமாக முறைப்பாடு செய்து விட்டு வெளியில் சென்று யாரோ இருவரிடம் கதைக்கிறார். பின்னர் மீண்டும் அந்த இருவருடன் உள்ளே வந்து பலதியாவுக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்கிறார்.
அத்தோடு அவசரசேவை அம்புலன்ஸுக்கும் அறிவிக்கின்றார். சற்று நேரத்தில் அங்கு அம்புயுலன்ஸ் வருகிறது. நோயாளி எங்கே என்று கேட்கப்படுகிறது. எவரும் அவசர கால நோய் வாய்ப்படாத நிலையில ஏன் இவ்வாறு அறிவித்தீர்கள் என கடிந்து கொள்ளப்படுகின்றது.
அதற்குப் பின்னர் பலதிய்யா அதிகாரிகள் வருகிறார்கள். கடைக்குள் எலியொன்று வந்திருக்க முடியுமா..? என்பது பற்றி ஆராய்கிறார்கள். உடனடியாக எதுவும் தெரிவிக்காமல் அவர்கள் சென்று விடுகிறார்கள். ஒரு நாள் கழித்து எமது உணவகத்தினை இரண்டு மாதங்கள் மூடுமாறு உத்தரவு வருகிறது .
இதுவே நடந்த சம்பவத்தின் உண்மை நிகழ்வுகளாகும்.
எனவே, எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட புரியாணியில் அல்லது கொத்து ரொட்டியில் எலி கிடந்தது என பரப்பப்பட்ட செய்திகளும் அல்லது புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் இதன் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகளும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்திகளாகும். 
குறிப்பிட்ட சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதற்கு மூன்று வகையான காரணங்கள் இருந்திருக்க முடியும். 
01. உணவகத்தின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் தெரிந்து கொண்டோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இதனைச் செய்திருக்க முடியும். 
02. யாரும் எதிர்பாராத திட்டமிடப்படாத ஒரு விபத்தாக இது நடந்திருக்க முடியும்.
03. வியாபார போட்டி காரணமாக அல்லது வேறு நோக்கங்களுக்கான சதியாக வேறு ஒருவரினால் திட்டமிட்டு இதறை செய்திருக்க முடியும்.
இங்கே முதலாவது காரணம் இருக்கவே முடியாது. கடை உரிமையாளர்கள் எவரும் தாம் பல வருடம் கட்டிக் காத்த நற்பெயருக்கு களங்கம் உண்டு பண்ணக்கூடிய இது போன்ற ஒரு பாரதூரமான விடயத்தினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனை சாதாரணமான எவராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.
அடுத்த விடயம், இது ஒரு விபத்தாக நடந்திருக்க முடியுமா..? என்பதாகும். அப்படியென்றால் உழுந்து வடை உற்பத்தி செய்யப்படும் நேரத்திலேயே இது நடந்திருக்க முடியும். உழுந்து வடை உற்பத்தியைப் பொறுத்த வரையில் மேன்று முக்கிய கட்டங்கள் இருக்கின்றன.
மூலப் பொருளான உழுந்தும் ஏனைய சேர்க்கைகளும் ஒரு இயந்திரம் மூலமாக மிகக்கடுமையாக நீண்ட நேரம் அரைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தவறுதலாக எலிபோன்ற ஒரு பிராணி விழுவது என்பது மிக அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்றாகும். அப்படி நடந்தாலும் அந்த எலி இறுதியில் முழு வடிவில் உழுந்து வடைக்குள் வர முடியாது. மாவோடு மாவாக அரைக்கப்பட்டு துண்டுதுண்டாகி விடும். ஆனால் இங்கு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி வடைக்குள் ஏறத்தாள முழு உருத்தில் ஒரு எலி இருந்ததாக சொல்லப்படுகின்றது.
ஆக. மாவரைக்கும் போது அதில் எலி தவறுதலாக விழுந்திருந்தால் பின்னர் அது முழு வடிவில் வடை ஒன்றுக்குள் இருப்பது அசாத்தியமான ஒன்றாகும்.
வடை உற்பத்தி செய்யப்படும்போது இரண்டாவது முக்கிய கட்டம் அரைக்கப்பட்ட மா கைகளினால் உருண்டை செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாக பொரிக்கும் பாத்திரத்தில் இடப்படுகிறது. அவ்வாறு ஒரு உள்ளங்கையில் அடங்கும் மா, உருண்டை செய்யப்படும் போது அதற்குள் ஒரு எலி போன்ற பிராணி நுழைவது அசாத்தியமானது. அது போலவே, கையில் எடுக்கப்படும் மாவுக்குள் அப்படியான ஒரு பொருள் இருப்பதனை இலகுவாக கண்டு பிடித்துவிட முடியும். எனவே, அந்த சந்தர்ப்பத்திலும் வடை ஒன்றுக்குள் எலி நுழைய முடியாது.
அடுத்ததாக வடை பொரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அப்பாத்திரத்தில் எலி வந்திருக்க முடியுமா..? என்பதாகும் . அப்படியே நடந்திருந்தாலும் வடை வேறாகவும் எலி வேறாகவும் இருக்குமே தவிர வடைக்குள் எலி இருந்திருக்க முடியாது.
ஆக வடை உற்பத்தி செய்யப்படும் எந்த இடத்திலும் பொரித்தெடுக்கப்பட்ட வடைக்குள் எலியொன்று முழுமையாக இருப்பதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது .
குறிப்பிட்ட தினத்தன்று எமது உணவு உற்பத்தி அறையில் குறித்த வடைகள் தயாரிக்கப்பட்ட முழுமையான CCTV கானொளிகள் எம்மிடம் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தையும், தினத்தையும் அவை நிரூபிக்கின்றன.
எலியொன்று வடைக்குள் நுழையவே இல்லை என்பதனை அவை தெட்டத் தெளிவாக நிரூபிக்கின்றன. இதனை எமது வாடிக்கையாளர்களுடனும், அவசியம் ஏற்படும் ஏனையவர்களுடனும் நாம் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.
மேலுள்ள இரண்டு காரணங்களின் அடிப்படையில் இது நடந்திருக்கவே முடியாது என்ற நிலையில் எஞ்சியிருக்கும் அடுத்த ஒரு சாத்தியப்பாட்டினை பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியிருக்கிறது.
அதாவது வியாபாரப் போட்டி அல்லது வேறு ஒரு பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட சதியாக இது நடந்திருக்க முடியுமா..? என இதை பல கோணங்களில் ஆராய வேண்டி இருக்கிறது.
இது ஒரு திட்டமிட்ட சதியாகவே நடந்திருக்க வேண்டும் என்ற பலமான சந்தேகத்தினை பின்வரும் காரணங்கள் எழுப்புகின்றன. 
முறைப்பாடு செய்த அந்த நபர் அச்சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தைத் தருகின்றது. முதலில் அவர் தெரிவு செய்து அமர்ந்த இடம் சந்தேகத்தைத் தருகின்றது. அதாவது வாடிக்கையாளர்கள் அதிகம் காணப்படாத அந்தக் காலை வேளையில் வழமையாக எல்லோரும் சௌகரியமாக அமர்ந்து சாப்பிடும் பல மேசைகள் காலியாக இருந்த நிலையிலும் இவர் ஒரு வித்தியாசமான ஒதுக்குப் புறத்தில் ஏன் அமர்ந்தார். அதுவும் CCTV கமெராவில் இருந்து தொலைவில் உள்ள ஏணிப்படிக்குக் கீழே அமைந்துள்ள ஒரு இடத்தை இவர் தெரிவு செய்து அமர்ந்ததற்கான காரணம் என்ன..?
தனதருகில் நின்று தன்னை கவனிக்க முனைந்த அந்த ஊழியரை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏன் அவர் முனைந்தார் ..?
 கழிப்பறைக்குள் நுழையும் போது தனது காற்சடை பொக்கற்றில் கைவிட்டு அவசரமாக எதை எடுப்பதற்கு முயற்சித்தார்..?
இவை எல்லாவற்றிட்கும் மேலாக அவர் தனது தொலைபேசியில் எந்தவிதமான photoவும் எடுக்காத நிலையில் ….வலைத்தளங்களில் உலாவிய போட்டோ எப்படி வந்தது ….
அது ஏற்கனவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா….
உண்மையில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி போன்ற ஒன்று இருப்பதனைக் சாப்பிடுகின்ற ஒரு வாடிக்கையாளர் கண்டால் அவருக்கு ஏற்படக்கூடிய பதற்றமும் ஆத்திரமும் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடியும். ஆனால் CCTV பதிவுகளைப் பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மிக அமைதியாக எழுந்து கழிப்பறைக்குச் செல்கிறார். பல நிமிடங்கள் கழித்து சாவகாசமாக வெளியே வந்து தனது சாப்பாட்டுத் தட்டினை தூக்கிக் கொண்டு காசாளர் இருக்கும் இடத்திற்குச் சென்று ஆரவாரம் எதுவுமின்றி ஆத்திரப்படாமல் முறையிடுகின்றார். பின்னர் வெளியே சென்று இன்னும் இருவரையும் அழைத்து வருகின்றார். அதன் பின்னர்தான் பலதியாவுக்கும் அம்பியுலன்ஸ் சேவைக்கும் முறையிடுகின்றார். இவரது இந்த நடவடிக்கைகள் பெருஞ் சந்தேகத்தைத் தருகின்றன.
தனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி ஒன்று இருப்பதனைக் கண்டவுடனேயே ஏன் அவர் அதிர்ச்சியடையவிலலை? ஏன் உடனடியாக உணவக ஊழியர்களிடம் முறைப்பாடு செய்யவில்லை.?
உடனடியாகச் சென்று வெளியில் இருந்து இருவரை அவர் அழைத்துவரக் காரணம் என்ன..?
அப்படியென்றால் அதற்காகவே அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களா..? அவர்கள் யார்..?
இப்படியான சூழ் நிலைகளின் போது பலதிய்யாவுக்கு அறிவிப்பது வழமையானதாகும். அப்படியிருக்க அம்பியுலனஸ் சேவையை ஏன் அழைத்தார்கள். ஏதோ ஒரு முன்கூட்டிய திட்டத்தோடு இவர்கள் அங்கு வந்தனரா..?
இப்படிப்பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளன.
இந்த நபரின் பின்னணி பற்றி நாம் ஆராய்ந்த போது இன்னுமொரு அதிர்ச்சியான, எமது சந்தேகத்தை வலுப்படுத்தும் படியான தகவல் ஒன்றும் தெரிய வந்தது. இந்த நபர் ஒரு பாகிஸ்தானி. எப்போதும் வழமையாக கடைக்கு வரும் நபரல்ல இவர். கடந்த ஜனவரி மாதத்தில் எமது உணவகத்தைப் பற்றிய ஒரு பொய்யான குற்றச்சாட்டொன்றினை இதே நபர் பலதியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனை பலதியா கண்காணிப்பாளரே எம்மிடம் தெரிவித்தார்.
இந்த பின்னணியில், கடந்த தடவை தனது முயற்சியில் தோற்றுப் போனதன் காரணமாக இம்முறை இவர் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இந்த சதியை இவர் செய்திருக்க்ககூடிய வாயப்பே அதிகம் இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்.
இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். சட்ட ரீதியாக பலதிய்யாவிடம், கத்தார் நாட்டு பொலிஸிடமும் முறையீடு செய்து இந்த சதியின் பின்னணியாளர்களைக் கண்டு பிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம்.
எமது பல வருட கால நம்பகமான சிறப்பான சேவையினை வாடிக்கையாளர்கள் அறிவார்கள். கட்டார் நாட்டில் எவ்வாறான வியாபாரப் போட்டிகள் நிலவுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். 
எமது இந்த உணவகம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான உணவகங்கள் உள்ளன. எமது தரமிக்க உணவு, குறைந்த விலை மற்றும் சிறப்பான சேவை என்பவை கண்டிப்பாக பொறாமையினையும் வியாபாரப் போட்டியினையும் உருவாக்கியிருக்க முடியும்.
இவ்வாறான ஒரு பின்னணியிலேயே எமது நற்பெயரைக் கெடுக்கக்கூடிய இந்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதியாக அரங்கேற்றப்பட்டுள்ளது என்றே நம்புகின்றோம். மேலும் பல்வேறு பட்ட குற்றச்செயல்களையும் துல்லியமாக கண்டறியும் கத்தார் போலீஸ் இந்தவிடயத்தில் உள்ள உண்மைகளையும் விரைவில் வெளிச்சத்தத்துக்கு கொண்டுவருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
எனவே இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் உண்மையை யதார்த்தமாக பார்க்க முற்படுவதோடு எம்மோடும் நேரடியாக தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது உணவகம் வழங்கும் தரமான உணவும் சிறப்பான சேவையும் தொடர்ந்தும் எம்மால் வழங்கப்படும் என்பதனையும் உறுதியளிக்கின்றோம்.
உரிமையாளர்/நிர்வாக குழு.