ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந் நிறுவனம் 110 மில்லியன் டொலர்கள் அபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் புனித லூயிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 தசாப்தங்களாக முகப்பவுடரை பயன்படுத்தி வந்த பின்னர், தனக்கு அதனால் புற்றுநோய் உருவானதாக மிசௌரி மாகாணத்தின் வெர்ஜினியாவை சேர்ந்த 62 வயதான லோயிஸ் ஸ்லெம்ப் என்பவர் தொடர்ந்த வழக்குக்கே குறித்த அபராத தொகை செலுத்தப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.
உடல் நலத்திற்கு கேடு விளைவித்ததற்கு 5.4 மில்லியன் டொலர்கள் கட்டாய இழப்பீடாவும், அபராத தொகையாக 105 மில்லியன் டொலர்களும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு தனக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்துக்கொண்ட லோயிஸ் ஸ்லெம்ப் தற்போது கீமோதெரப்பி எனப்படும் இரசாயன சிகிச்சை எடுத்து வருகிறார்.
ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்திற்கு எதிராக அதனுடைய பவுடர் பொருட்கள் மீது சுமார் 2,400 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முகப்பவுடர் தொடர்பான மூன்று வழக்குகளில் ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனம் தோல்வியடைந்தது. ஆனால், மிசௌரி நீதிபதி இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக பக்கசார்பு நிலை எடுத்ததால், மார்ச் மாத முதல் விசாரணையில் இந்த நிறுவனம் முதல் வெற்றியை பெற்றது.